Thursday, January 11, 2018

அது என்னப்பா அது கர்ப்ப ஓட்டம்!!

தமிழர்களின் கண்டுபிடிப்புக்களை இன்று தமிழர்கள் அறியாமல் அடையாளம் இழந்துகொண்டுள்ளனர்.  தினசரி காலண்டரில் "இன்று" “கெர்போட்ட நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு கண்டேன் அப்படி என்றால் என்ன? ஏதேனும் விசேட நாளா?

நான் மட்டுமல்ல நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது எப்போதாவது எல்லோருமே தான் கண்டிருப்போம் கெர்போட்ட ஆரம்பம் என்றொரு அறிவிப்பை. சிலர் அரசு விடுமுறை தினங்களைத்தேடி நாட்காட்டியின் பின்புறம் தேடுகையில் கூட கெர்போட்ட நிவர்த்தி என்ற ஒரு அறிவிப்பு இருப்பதைக் கண்டிருக்கலாம்.

இது ஏதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாதக் கோவில் திருநாளோ அல்ல, உண்மையில் தமிழர்களின் அடுத்த வருட மழைக்கணிப்பு முறைகளில் ஒன்றே இதுவும்! அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி காலப்போக்கில் கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்றப்படுகின்றன.

இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர் அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில், சூரியன் தனூர் ராசி மண்டலத்தைக் கடக்கும் போது பூராட நட்சத்திரத்தைக் கடக்கப் பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது. இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம். இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும்.

அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள், இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்கள் மார்கழியில் கர்ப்பம் தரிக்கும் பெண் ஒருத்தி... ஒன்பது மாதம் கழித்துப் புரட்டாசிக்குப் பின் பிள்ளைப் பேறடைவாள்.

அவ்வகையில் இந்த கர்போட்ட நாட்களில் மழை முறையாக சூல் கொண்டால், ஒன்பது மாதம் கழித்து அடுத்த ஆண்டில் ஐப்பசி, கார்த்திகையில் மழைப்பொழிவு அளவும் முறையாக இருக்கும் இந்த கர்போட்ட நாட்கள் தோராயமாக டிசம்பர் 28 முதல் ஐனவரி 11ஆந் தேதி வரை அமைகிறது  ஒரு எளிய விவசாயிக்கு தனூர் மாதம் பூராடம் நட்சத்திரமெல்லாம் தெரியாது இல்லையா??

எனவே, மார்கழி மாதம் அமாவாசையில் இருந்து அடுத்து வரும் பதினான்கு நாட்கள் "கர்போட்ட நாட்கள்" என்று நினைவில் வைத்துக் கொள்வார்கள் இந்நாட்களில் லேசான தூறல், மெல்லிய சாரல் போன்ற மழை இருந்தால் மேகம் சரியாக கருகட்டி இருக்கிறது என்று பொருள் எனவே அடுத்து வரும் ஆண்டில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்று விவசாயிகள் புரிந்து கொள்வார்கள்.

மாறாக கர்ப்போட்ட நாட்களில் கனமழை பெய்து சூறைக்காற்று வீசினாலோ, கடும் வெயில் இருந்தாலோ மேகத்தின் கருக்கலைந்து விட்டது என்று பொருள் கொள்வார்கள். எனவே மார்கழியில் கன மழை பெய்தால் அடுத்த ஆண்டு பருவமழை பொய்க்கும் என அர்த்தம். இன்றைய வாழ்க்கையின் மாறுபட்ட சூழலியல் கேடுகளும் பருவநிலை மாற்றமும் கருக்கொள்ளும் மேகத்தைக் கலைக்கும் வில்லன்களாக உருவெடுப்பதால்தான் ஒவ்வொரு வருடமும் மழையளவு குறைகிறது இந்த கர்போட்ட நாட்களை கணித்து இன்றும் திருநெல்வேலி பகுதிகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் மானாவாரி (வானம் பார்த்த பயிர்) பயிர்களை விதைக்கிறார்கள்.

சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு முன்னால் பூமியின் அச்சு அசையாமல் இருக்கும். இது தான் கர்ப்போட்டம் சங்கப்பாடல்களில் இதைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் எத்தனை மிமீ மழை எங்கே எவ்வளவு பதிவு ஆகிறதோ, அதை ஆறு மாத நாள்களால் பெருக்க வேண்டும். உதாரணம் 5மிமீ × 180 = 900மிமீ சராசரியாகப் பெய்யும்.


அதற்கு தகுந்தாற் போல் நீர் மேலாண்மை செய்வார்கள். பயிரைத் தேர்வு செய்வார்கள். நாம் இதுபற்றி எல்லாம் தெரியாமல் காலண்டரில் கர்ப்போட்டம் என்று பார்த்ததும் ஏதோ பண்டிகை என்று நினைத்து தேதியை கிழிப்பது போல பாரம்பரியத்தை கிழிக்கிறோம் ஆங்கில கல்வியில் நம் பாரம்பரியத்தை இழந்து இன்று மழைவரும் நாட்களை தெரிந்துகொள்ள வானிலை அறிக்கைக்கு டீவியைப் பார்த்து கொண்டு அமர்ந்திருக்கிறோம்  புதுமையின் மோகத்தில் எத்தனை பழமைகளை இழந்து கொண்டிருக்கிறோம் நாம்!!

நன்றி : தினமணி

Wednesday, December 27, 2017

யார் இந்த குயிலி?


வீரப்பெண் குயிலி

குயிலி
வீரம் விளைந்த மண் நம் தமிழகம் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். நம் தாய்நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்துத் தியாகம் செய்தனர். அதே போல் நமது பெண்களும் அவர்களுக்கும் மேலாகத் தியாகம் செய்திருக்கின்றனர். அப்படிப்பட்டப் பெண்களில் ஒருவர் தான் வீரப்பெண் குயிலி.

சிவகங்கை சமீபத்தில் உள்ள பாசங்கரை எனும் ஊரில் பெரியமுத்தன் -ராக்கு தம்பதியின் ஒரே மகளாக குயிலி பிறந்தார். சிறு வயதில் தாயை இழந்த பின் குயிலியும் அவர் தந்தையும் சிவகங்கை சமீபத்தில் உள்ள முத்துப்பட்டி என்ற ஊருக்கு குடிபெயர்ந்தனர்.

சிறு வயதிலிருந்தே குயிலி அவர்கள் ராணி வேலு நாச்சியாரின் வீரம் மற்றும் விவேகத்தால் பெரிதும் கவரப்பட்டார். ஒரு சமயம் தந்தையும் மகளும் ராணியை பார்க்க வேண்டும் என்று காவலரிடம் அனுமதி வேண்டினர். அப்போது அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த ராணி, உடனடியாக அவர்களை அழைத்தார். மேலும் தந்தையையும் மகளையும் அரண்மனையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதி வழங்கினார். காலப்போக்கில் தந்தையும் மகளும் வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்கும் அன்பிற்கும் பாத்திரமானார்கள்.

1773ல் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேயர்கள் நயவஞ்சமாக கொன்று, பின்னர் அரண்மனையையும் கைப்பற்றினார்கள். இதன் பின் ராணி வேலு நாச்சியார் சுமார் 8 ஆண்டு காலம் தலை மறைவாகவே இருந்து வந்தார்.

ஒரு சமயம் வேலு நாச்சியாரின் சிலம்பாசிரியர் வெற்றிவேல் என்பவர் ஒரு ஓலையைக் கொடுத்து குறிப்பிட்ட நபரிடம் ஒப்படைக்குமாறு கூறி, கூடவே கூலியாக ஒரு பையையும் கொடுத்தார். அந்த ஓலையானது வேலு நாச்சியாரின் போர் நுட்பங்களைப் பற்றியது என்று அறிந்த குயிலி வெகுண்டெழுந்து வெற்றிவேலை வெட்டி வீழ்த்தினார்.

சம்பவ இடத்திற்கு வந்த வேலு நாச்சியார் ஓலையை படித்தப் பின் தன் சிலம்பாசிரியர் ஒரு ஆங்கிலேய ஒற்றன் என்பதை அறிந்தார். தன்னிடம் குயிலிக்கு இருந்த விசுவாசத்தை மெச்சி அவரை தன் அந்தரங்க காவலராக நியமித்தார்.

இன்னொரு சமயம் வேலு நாச்சியார் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பொழுது அவரை கொலை செய்யும் நோக்கத்துடன் அவர் மீது ஒரு குறு வாள் வீசப்பட்டது. அருகில் இருந்த குயிலி தன் வெறும் கையினால் அந்த வாளை தடுத்தார். தூக்கத்திலிருந்து எழுந்த வேலு நாச்சியார் குயிலி கையில் ரத்தம் பெருகுவதை கண்டார். நிலைமையை புரிந்து கொண்டு தானே குயிலிக்கு மருந்து கட்டு போட்டு விட்டார். குயிலியை தன் மகளாகவே வேலு நாச்சியார் பாவித்தார். குயிலியும் அவர் தந்தையும் வேலு நாச்சியாரின் அந்தரங்க ஒற்றர்கள் என்றறிந்த ஆங்கிலேயர்கள் எப்படியாவது குயிலியை கொலை செய்ய வேண்டும் என்று தீர்மானித்தனர்.

1780ல் மருதுபாண்டியர் தலைமை மற்றும் ஹைதர் அலி படை உதவியுடன் சிவகங்கையை மீட்க வேலு நாச்சியார் படை எடுத்தார். இந்த முயற்சியில் பெண் படைக்கு குயிலி தலைமை வகித்தார். வேலு நாச்சியார், மல்லாரிராயன் என்பவரையும் மற்றும் தளபதி ஜோசப் ஸ்மித் என்பவரையும் வெட்டி வீழ்த்தினார்.

ஆங்கிலேயர்கள் சிவகங்கை அரண்மனையை தங்கள் ஆயுத கிடங்காக உபயோகித்து வந்தனர். கிடங்கையையும் அதன் சுற்றுப்புறத்தையும் நன்றாகவே பாதுகாத்து வந்தனர். ராணி வேலு நாச்சியார் அவர்களின் இறுதி போரில் தோற்றுவிடக்கூடாது என்பதில் குயிலி மிகவும் குறியாக இருந்தார். இது சம்பந்தமாக உளவு வேலையும் ஆரம்பித்தார்.

சிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் விஜயதசமி அன்று தரிசனம் செய்ய எல்லா பெண்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. ராணி வேலு நாச்சியார், குயிலியுடன் பெண் படை அரண்மனைக்குள் புகுந்தது .கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியேறும் தருணம், “வெற்றிவேல்!! வீரவேல்!!!” என்று முழங்கியபடி அங்கிருந்த ஆங்கிலேயர்களை வெட்டி வீழ்த்தினர்.
இதற்கிடையில் குயிலி தன் உடல் முழுவதும்,தீப நெய் ஊற்றிக்கொண்டு தனக்கு தீயூட்டிக்கொண்டு ஆயுதக்கிடங்கில் குதித்தார் . ஆயுதக் கிடங்கில் இருந்த அனைத்து வெடி மருந்துகளும் தீப்பிடித்து வெடித்துச் சிதறின.


குயிலியின் தற்கொலை பற்றி அறிந்த ராணி மிகவும் மனவேதனை அடைந்தார். நாட்டின் விடுதலை போரில் தன்னையே ஈன்றவர் குயிலி. குயிலுக்கு பாசங்கரை கிராமத்தில் ஒரு நினைவு சின்னம் இருக்கிறது. அப்பகுதி மக்கள் அவரை தீப்பாஞ்ச அம்மன் என்று வழி படுகிறார்கள்.