Wednesday, December 25, 2013

அடல் என்னும் ஆளுமை

11 மே 1998, அன்றைய தினசரி நாளிதழைக் கண்ட அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் கண்கள் சிவந்தன.

அடல் பிஹாரி வாஜ்பாய்
எத்தனை உளவு செயற்கைகோள்கள், சி.ஐ.ஏ அமைப்பு, அதன் துண்டு எலும்புக்கு வாலாட்டும் ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் பல உலக நாடுகளின் கொள்ளிக் கண்களையும் மீறி பாரதம் தன்னுடைய அணுகுண்டு சோதனையை வெற்றிகரமாக முடித்து, தன்னுடைய ஆளுமையையும், தன்னை முழுமையான அணு ஆயுதம் கொண்ட தேசமாகவும் தலை நிமிர்ந்து உரைத்தது.

இதன் பின்னணியில் இருந்தவர் தான் அடல் பிஹாரி வாஜ்பாய். பாரதத்தின் 10வது பிரதம மந்திரி இருந்து, நம் நாடு பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற வித்திட்டவர்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய கடும் உழைப்பாலும், நேர்மைத் திறத்தாலும் நாட்டின் பிரதம மந்திரியாக உயர்ந்தவர்.

தன்னுடைய வாழ்வை பத்திரிக்கை நிருபராக தொடங்கினார். அப்போது சுதந்திர போராட்டம் உச்சக்கட்டத்தை நெருங்கியிருந்தது. அவர் தீவிரமாக அதில் பங்கெடுத்தார். ராஷ்ட்ரதர்ம, வீர் அர்ஜுன், பாஞ்சஜன்யா மற்றும் ஸ்வதேஷ் போன்ற பத்திரிக்கைகளில் பணியாற்றினார். தன் இளமைக் காலத்திலேயே தன்னுடைய வாழ்வை நாட்டிற்காக அர்ப்பணிக்க உறுதி பூண்டு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தில் இணைந்து பிரசாரகரானார். அவர் தன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

1942, ஆகஸ்ட் புரட்சியின் போது அவரும் அவருடைய அண்ணன் பிரேமும் சிறையில் அடைக்கப்பட்டனர். அது அவருடைய அரசியல் பயணத்தின் ஆரம்பமாக இருந்தது என்றே சொல்லலாம். பின்னர் சுதந்திர வேள்வியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

சியாமா பிரசாத் முகர்ஜி
1951-ல், பாரதீய ஜன சங்கம் ஆரம்பிக்கப்பட்ட போது அதில் வேலை செய்வதற்காக நியமிக்கப்பட்டார். அதன் தலைவராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் தலைமை பண்பாலும், சிந்தனைகளாலும் ஈர்க்கப்பட்டு அவருடைய உதவியாளர் ஆனார். 1954-ல் காஷ்மீருக்காக முகர்ஜி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது அவரும் கலந்துக் கொண்டார், இதில் முகர்ஜி சிறையில் மர்மமான முறையில் இறந்தார். அது அவருக்கு பேரதிர்ச்சி அளித்தது. பின்னர், தீனதயாள் உபாத்யாயா ஜன சங்கத்தின் தலைவரானார். 1957ல் வாஜ்பாய் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய பேச்சுத் திறத்தினால் வெகு சீக்கிரத்திலேயே ஜன சங்கத்தின் அடையாளமாக மாறினார்.

தீனதயாள் உபாத்யாயா
லோக்சபாவில் அவருடைய பேச்சைக் கேட்ட அப்போதைய பிரதமர் நேரு இவர் ஒரு நாள் பாரத்தின் பிரதமராவார் என்று ஊகித்தாராம். 1968, தீனதயாள் உபாத்யாயாவின் மரணத்தைத் தொடர்ந்து ஜன சங்கத்தின் தலைமை இளம் வாஜ்பாயின் தோளில் வந்து சேர்ந்தது. அதைத் தொடர்ந்து அவரும் அவருடன் நானாஜி தேஷ்முக், லால் கிருஷ்ண அத்வானி, பால்ராஜ் மதோக் ஆகியோர் இணைந்து ஜன சங்கத்தை தேசிய அளவில் முன்னிறுத்தினார்கள்.

1975 ல் அவசரநிலையை பிரகடனம் செய்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அப்போது பல எதிர்கட்சி தலைவர்களுடன் அடல்ஜியும் கைது செய்யப்பட்டார். 1977ல் அவசர நிலை நீக்கப்பட்ட போது சமூக ஆர்வலர் ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்த அழைப்பை ஏற்று இந்திராவிற்க்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஜனதா கட்சி என்ற மாபெரும் கூட்டணி அமைத்தார் அடல்ஜி. 1977 தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிப் பெற்று மொரார்ஜி தெசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. அதில் அடல் ஜி மிகச்சிறப்பாக பணியாற்றினார், வெளிஉறவுத்துறை அமைச்சராக பதவியேற்று ஐ.நா சபையில் முதன் முதலில் ஹிந்தியில் உரையாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றார். அவருடைய பணிக்காலத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நல்லுறவுகளை காண விளைந்தார்.

மொரார்ஜி தெசாய்
1979ல் உட்கட்சிப் பூசலால் ஜனதா கட்சி சிதைந்து மொரார்ஜி தேசாய் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது பாரதிய ஜனதா கட்சி என்ற கட்சியை தன்னுடைய நீண்ட நாள் நண்பர்களான அத்வானி மற்றும் பைரோன் சிங் ஷெகாவத்துடன் இணைந்து 1980ல் ஆரம்பித்து அதன் முதல் தலைவரானார். காங்கிரஸுக்கு மாற்று அரசியல் சக்தியாக உருவானார்.

1980 முதல் பல தடைகள், அரசியல் போராட்டங்கள், சீக்கியர் கலவரம் போன்ற பல இன்னல்களை எதிர்கொண்டு அடல் ஜி தன்னுடைய தலைமைப் பண்பால் கட்சியை ஒருங்கிணைத்து தேசிய அரசியலில் தன்னை ஒரு மாபெரும் ஆளுமையாக நிலைநிறுத்திக் கொண்டார். 1996ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதும் அருதிப் பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் 13 நாள் பிரதமாராக இருந்து விலகினார்.

நானாஜி தேஷ்முக்
 1998ம் ஆண்டு தேசிய ஜனநாயக முன்னணி என்ற வலுவான கூட்டணியை அமைத்து அதன் அமைப்பாளராகவும் இருந்தார். அந்த ஆண்டு நடைபெற்றப் பொது தேர்தலில் தே.ஜ.கூ அருதிப் பெரும்பாண்மை பெற்று ஆட்சி அமைத்தது. பாரத்தின் பிரதமராக அடல் பிஹாரி வாஜ்பாய் பதிவியேற்றார். அவர் பதவியில் இருந்த ஆண்டுகள் அவருக்கு முள் படுக்கையாகவே இருந்தன.

பொக்ரான்-2 அனுகுண்டு சொதனையால் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் பாரதம் மீது பொருளாதாரத் தடை விதித்தன, அதை தன்னுடைய வலிமையான பொருளாதாரக் கொள்கைகளாலும், தலைமையாலும் எதிர்த்து நாட்டை வளர்ச்சியின் பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் அந்த நாடுகள் தாமாகவே நம் நாட்டின் மீதான பொருளாதாரத் தடையை நீக்கின.

அடல் அவர்களுக்கு பாகிஸ்தான் மற்றும் நம்முடைய அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணவே விருப்பப் பட்டார். பாகிஸ்தானுடன் காஷ்மீர் பிரச்சினையை சுமுகமான முறையில் தீர்க்கப் பல்வேறு வழிகளை முன்வைத்தார், அவை பாகிஸ்தானிடம் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறியது. 1999ம் ஆண்டு கார்கில் போர் மூண்டது ஆபரேஷன் விஜய் மூலம் அதை வெற்றிகரமாக முறியடித்தார் வாஜ்பாய். போர் நேரத்தில் போர்முனைக்கேச் சென்று நமது ராணுவ வீரர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். இது எந்த ஒரு பிரதமரிடமும் இல்லாத ஒரு குணம். இப்போதைய பிரதமரை நினைக்கும் போது நமக்கு ஏனோ ஒரு நெருடல் ஏற்படுகிறது.

இத்தனை இடர்களையும் மீறி அவருடைய ஆட்சிக் காலத்தில் பல உள்நாட்டு பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். பல வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தார். தகவல் தொழில்நுட்பத் துறையை நம் நாட்டில் ஊக்குவித்து வளர்ச்சி அடைய செய்தார். எனினும் இவை அவருடைய குறிக்கோள் கிராமபுர வளர்ச்சியில் தான் இருந்தன.

அவருக்கு பிடித்த திட்டங்களாக இருந்தவை தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி ஊரக வளர்ச்சி திட்டங்களே. அதன் மூலம் கிராம வளர்ச்சியும் நகர வளர்ச்சியும் ஒரு சேர இருக்க வேண்டும் என்பதே அவரது கோட்பாடாக இருந்தது. அவரது அனைவருக்கும் கல்வி திட்டமும் அதன் ஒரு பகுதி என்றே கூறலாம். பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் அடைந்தது. நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி விகிதம் (GDP) 6-7% வரை உயர்ந்தது. விவசாய வளர்ச்சியும் தொழில் துறை வளர்ச்சியும் நல்ல முறையில் இருந்தன. இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருந்தது அவரின் பொருளாதாரக் கொள்கைகள்.

மதுரை சின்னப்பிள்ளை மற்றும் வாஜ்பாய்
மதுரையில் ஒரு கிராமத்தில் களஞ்சியம் எனும் ஒரு சுய உதவிக்குழுவின் மூலமாக சின்னபிள்ளை என்பவர் பெண்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தினார். அவருக்கு ஸ்த்ரீ சக்தி புரஸ்கார் என்ற விருதை வழங்கினார் அடல் ஜி. அப்போது அவரை விட வயதில் குறைந்த சின்னப்பிள்ளை அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். அவருடைய பணிவிற்கு சான்றாக அமைந்தது இந்த நிகழ்வு. மேலும் கிராம முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த பற்றும் இதில் பிரதிபலித்தது.

அவர் சிறந்த கவிஞரும் கூட. தன்னுடைய கவிதைகளைப் பற்றி மிகத் தெளிவாக இப்படிக் குறிப்பிடுகிறார் "என்னுடைய கவிதைகள் ஒரு போருக்கான அறிவிப்பு பொன்றவை, அது தோல்விக்கான முன்னறிவிப்பு அல்ல. அது தொல்வி கண்ட சிப்பாயின் முழக்கம் அல்ல, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட போராளியின் முழக்கம். அது சோர்வடைந்த ஒலம் அல்ல, உள்ளத்தைக் கிளறுகின்ற வெற்றி முழக்கம்"

பத்ம விபூஷன் விருது பெற்றவர். மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர். சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருது பெற்றவர்.

இன்று அந்த மாபெரும் ஆளுமையின் 89வது பிறந்த நாள்.


25 டிசம்பர் 1924, அன்று கிருஷ்ண தேவிக்கும், கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய்க்கும் மகனாக பிறந்தார். இவருக்கு நமிதா என்ற வளர்ப்பு மகள் உள்ளார். அடல்ஜியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டர்கள் என்றே நம்புகிறேன். அன்னாருக்கு என் பணிவாக வணக்கங்கள்.மேலதிக விவரங்களுக்கு:

No comments:

Post a Comment