Monday, July 28, 2014

கார்கில் வெற்றி தினம் - இன்று

இன்று கார்கில் வெற்றி தினம். இந்த நாளை கொண்டாடுகையில் இந்த வெற்றிக்கு காரணமாக இருந்து தம் இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம்
யோகேந்திர சிங் யாதவ், பரம்வீர் சக்ரா விருது
யோகேந்திர சிங் யாதவ்
கிரெனெட் வீரர் யோகேந்திர யாதவ், டைகர் ஹில்ஸ் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற காடக் ப்ளாடூனில் ஜூலை 3- 4, 1999 ஆண்டு பங்கு பெற்றார். மலைபகுதி மிகவும் சரிவாகவும், பனிபடர்ந்ததாகவும் இருந்தது. அத்தகைய பாதையில் தன் படையினருக்காக கயிறுகளை கட்டும் பணியை மேற்கொண்டார் யோகேந்திரசிங் யாதவ். அப்போது அதை கவனித்த பாகிஸ்தானியர்கள் குண்டுமழை பொழிந்தார்கள். இந்த தாக்குதலில் காடக் பிளட்டூனின் கமான்டர் உள்ளிட்ட பல வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள். ஒட்டுமொத்த இந்திய ராணுவ தாக்குதலும் தோல்வி அடைந்து முடங்கும் நிலை உருவானது.
இதை கவனித்த கிரேனேடியர் யோகேந்திரசிங் யாதவ் சாமர்த்தியமாக குண்டு மழைக்கு நடுவேயும் தனி ஒருவராக முன்னேறி சென்று, கிரெனைடுகளை வீசியும், தன்னிடம் இருந்த ஆயுதங்கள் தீரும் வரையும் போரிட்டு நாலு பாகிஸ்தானியரை கொன்றார். எதிரியின் குண்டுகள் அவர் உடலை துளைத்தும் மரணிக்கும் கடைசி வினாடி வரை அவரது துப்பாக்கி குண்டுகளை உமிழ்வதை நிறுத்தவில்லை. யோகேந்திரசிங் யாதவின் வீர மரணத்தை கண்ட இந்திய ராணுவம் உத்வேகம் அடைந்து முன்னேறி சென்று டைகர் ஹில்ஸை தாக்கி கைப்பற்றியது.
கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம்வீர் சக்ரா விருது 
மனோஜ் குமார் பாண்டே
ராணுவத்தில் சேர்கையில் இன்டர்வியூவில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்வி “நீ ஏன் இந்திய ராணுவத்தில் சேர விரும்புகிறாய்?” என்பது
அதற்கு மனோஜ்குமார் பாண்டே அளித்த பதில் “நான் பரம்வீர் சக்ரா விருதை வெல்ல விரும்புகிறேன்”!!! பரம்வீர் சக்ரா விருது வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு வழங்கபடும் விருது.
இவர் கார்கில் போரில் ஜூபார் பகுதியை கைப்பற்ற நடைபெற்ற போரில் பங்குபெற்றார். மிக குறுகலான பகுதியில் படைகளை வழிநடத்தி சென்றார். இதை கண்ட எதிரிகள் குன்டுமழை பொழிந்தார்கள். குண்டுகளை மார்பில் தாங்கியபடி வீர முழக்கம் எழுப்பியபடி முன்னேறி பாய்ந்தார் மனோஜ் பாண்டே. குண்டுகள் தீர்ந்த நிலையில் எதிரியின் முதலாவது பங்கரை அடைந்து அங்கே இருந்த இரு பாகிஸ்தானியரை வெறும் கையால் அடித்து கொன்றார். அதன்பின் குன்டுகாயத்தால் தம் இன்னுயிரை இழந்தார். தம் கேபட்னின் வீரமரணத்தை கண்ட இந்திய ராணுவத்தினர் உயிரை துச்சமென மதித்து முன்னேறி தாக்கினார்கள். கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த ஜூபார் பகுதி இந்திய ராணுவத்திடம் வீழ்ந்தது
கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம்வீர் சக்ரா விருது
கேப்டன் விக்ரம் பத்ரா
கேப்டன் விக்ரம் பாத்ரா 17,000 அடி உயரம் கொண்ட பாயின்ட் 5140 எனும் மலை சிகரத்தை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். தம் வீரத்துக்காக ‘ஷேர் ஷா (சிங்க ராஜா) என அழைக்கபட்ட விக்ரம், மலையின் பின்பகுதி வழியே எதிர்பாராதவிதமாக ஏறி தாக்குதல் தொடுத்தார். கடும் குண்டுமழைக்கு இடையே உடலெங்கும் குன்டுகாயங்களை தாங்கியபடி மலை உச்சியை நெருங்கிய விக்ரம் அங்கிருந்து சுட்டுகொண்டிருந்த எதிரியின் பீரங்கி மேல் இரு கிரனைடை எறிந்தார். அதில் இருந்து எதிரி மீள்வதற்குள் மலை உச்சியை அடைந்து மூன்று எதிரிகளை தனி ஒருவராக கொன்றார். அதன்பின் இந்திய படை மலை ஏறி எட்டு பாகிஸ்தானியரை கொன்று ஒரு பெரிய மெஷின்கன்னையும், கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த பாயின்ட் 5140வையும் கைப்பற்றியது. மலை உச்சியில் இந்திய கொடியைப் பறக்கவிட்டபின் விக்ரம் சர்மா தம் இன்னுயிரை நீத்தார்
ரைபிள்மேன் சஞ்சய் குமார், பரம்வீர் சக்ரா விருது
சஞ்சய் குமார்
இவர் சாதாரண படைவீரர். ஆனால் அசாதாரணமான வீரத்தை களத்தில் காட்டினார். ஏரியா பிளாட் டாப் எனும் மலைபகுதியை கைப்பற்ற சென்ற படையில் பங்கு பெற்றார். மலை உச்சியில் இருந்து எதிரிகள் சுட்டார்கள். குண்டுமழைக்கு நடுவே மலை ஏறும் நிலையில் 150 அடி தூரத்தில் எதிரி பங்கர் ஒன்றை பார்த்தார் சஞ்சய்குமார்
150 அடிதூர பங்கரை நோக்கி எழுந்து ஓடினார். எதிரிகுண்டுகள் அவர் மேல் பாய்ந்தவண்ணம் இருக்க மார்பில் மூன்று குண்டுகளை தாங்கியபடி ஓடினார். அடுத்த குண்டு அவரது மணிக்கட்டில் பாய்ந்து துப்பாக்கீயை வீழ்த்தியது. தளராமல் பங்கரை அடைந்து வெறும் கையால் மூன்று பாகிஸ்தானியரை அடித்து கொன்றார் சஞ்சய் குமார். அதன்பின் அவர்களின் இயந்திர துபாக்கியை எடுத்து இரண்டாவது பங்கரில் இருந்த பாகிஸ்தானியரை சுட்டுகொன்றார். அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தானியர் இரண்டாவது பங்கரை விட்டு ஓடினார்கள். ஏரியா பிளாட் டாப்பை இப்படி தனி ஒருவராக தன் இன்னுயிரை பலி கொடுத்து கைப்பற்றினார் சஞ்சய்குமார்.
மேஜர் சரவணன், வீர் சக்ரா விருது
மேஜர் சரவணன்
மேஜர் சரவணன் படாலிக் பகுதியை கைப்பற்ற நடந்த போரில் பங்கு பெற்றார். கார்கில் போர் முழுக்க மலைபகுதியின் மேல் இருந்து தாக்கும் எதிரியை கீழே இருந்து தாக்கி அழிக்கும் நிலையிலேயே இந்திய படை இருந்தது. இப்போரில் மேலே இருந்து சுட்ட எதிரி மேல் ஒரு ராக்கெட்டை செலுத்தி இரு எதிரிகளை அழித்தார் சரவணன். அவர் உடலில் ஷார்ப்பனல் குண்டு பட்டபோது அவரது கமாண்டர் “போதும். சரவணன், வந்துவிடு” என அழைத்தார். தன் உயிர் போகும் நிலையை உணர்ந்த சரவணன் “இன்று இல்லை, காப்டன்” (Not today, captain) என சொன்னபடி குண்டுகளை வீசி மேலும் மூன்று எதிரிகளை வீழ்த்தியபின் கார்கிலின் வெண்பனியில் விழுந்து வீரமரணம் அடைந்தார்.
நாட்டுக்காக எல்லாரும் சிலவற்றை கொடுத்தார்கள். ஆனால் இம்மாவீரர்கள் தம்மிடம் இருந்த அனைத்தையும் தாய்நாட்டுக்காக ஈந்தார்கள். இவர்களை நினைவை நம் மனதில் என்னாளும் போற்றுவோம்
வந்தே மாதரம்! வெல்க பாரதம்!! வாழ்க இம்மாவீரர் புகழ்!!


Wednesday, April 16, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


இந்த வருடம் "ஜய" வருடம் என்று பெயர் கொண்டுள்ளது. ஜய என்ற சொல்லுக்கு வெற்றி என்பது அர்த்தம் ஆகும். இந்த ஆண்டு அனைவருக்கும் வெற்றியைத் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

புத்தாண்டு பற்றி முன்பே வெளியிட்ட வலைப்பதிவை இங்கே பதிகிறேன்.

அன்புடன்,
சரவணன்

Monday, April 14, 2014

பாபா சாஹேப்

பாபா சாஹேப்


இன்றைய தினம் நம் நாட்டின் மாமேதை ஒருவரின் பிறந்தநாளும் கூட. அவர் பாரதரத்னா டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்து அத்தனை தடைகளையும் முட்டி மோதி வெற்றிப் பெற்றவர்.

பீம்ராவ் 1891 ஏப்ரல் 14 மத்திய பிரதேசத்தில் மஹோவ் என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ராம்ஜி மலோஜி சல்பால், தாயார் பெயர் ரமாபாய். இவர் பிறந்த போது ராம்ஜி மலோஜி சக்பால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் மஹோவ் கண்டோன்பெண்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி தாலுகா அம்பவடே நகரம் இவரது குடும்பத்தினரின் பூர்வீகம். மகர் சமுதாயத்தை சார்ந்தவர். தீண்டாமை கொடுமைக்கு ஆளாகிய சமுதாயம் அது.

பீம்ராவ் மேல் மிகுந்த அன்பும், பரிவும் கொண்ட மகாதேவ் அம்பேத்கர் என்ற பிராமண சமுதாய ஆசிரியர் பள்ளி ஆவணத்தில் பீம்ராவ் அம்பவடேகர் எனும் பெயருக்கு பதிலாக தனது குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இணைத்து பீம்ராவ் அம்பேத்கர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெயரே இறுதிவரை நிலைத்துவிட்டது.

டாக்டர் அம்பேத்கர் வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். பல நேரத்தில் காந்திஜி போன்ற முக்கிய தலைவர்களின் கருத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்துள்ளது இவரது சிந்தனை. இருந்த போதிலும் இவர் ஒரு தலைசிறந்த தேசபக்தர். தேசத்திற்கு விரோதமாக எந்த செயலையும் அவர் மேற்கொண்டதில்லை. தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வாக தெளிவான கருத்துகளையே எப்போதும் கூறி வந்துள்ளார். அதில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சலுகையும் அம்பேத்கரும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் எதுவும் தரக்கூடாது என்று அரசியல் சாசன சபையில் எதிர்ப்புத் தெரிவித்தார் மேலும் அம்மாதிரியான சட்டப்பிரிவை தன்னால் எழுதிட இயலாது என்று சொல்லிவிட்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் தருவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட நேரு இது விஷயமாக டாக்டர் அம்பேத்கரை நேரில் சந்திக்க தைரியமின்றி ஷேக் அப்துல்லாவை அனுப்பி வைக்கிறார்.

அம்பேத்கர் அவர்களை நேரில் பார்த்து பேசிட வருகை தந்த ஷேக் அப்துல்லாவிடம், "எல்லைகளைக் காத்திர இந்திய ராணுவம் வேண்டும், நல்ல சாலைகளை பாரதம் அமைத்துத் தர வேண்டும், தேவையான உணவு பொருட்களை பாரதம் அமைத்துத் தர வேண்டும், பாரதத்திற்கு நிகரான சம அந்தஸ்து காஷ்மீருக்கு தரப்பட வேண்டும்" என்றெல்லாம் எதிர்பார்க்கும் நீங்கள், காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசின் வசம் குறைந்த அதிகாரமே இருக்க வேண்டும், இந்தியர்கள் எவருக்கும் காஷ்மீரில் எந்த உரிமையும் கூடாது என்று சொல்கிறீர்கள். இம்மாதிரியான ஒரு சட்டத்திற்கு நான் ஒப்புதல் அளித்தால் அது பாரதத்தின் நலனிற்கு எதிரானது மட்டுமல்ல, மிகப்பெரிய துரோகமாகும். பாரதத்தின் சட்ட அமைச்சரான என்னால் இச்செயலை செய்ய இயலாதென ஷேக் அப்துல்லாவிடம் தெளிவாக கூறி அனுப்பிவிட்டார்.

எனினும் நேருவின் பலமான ஆதரவால் அம்பேத்கரின் ஒத்துழைப்பு இல்லாமலே அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த சட்டம் 10 ஆண்டுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றார் பிரதமர் நேரு, பின்னர் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்தானது.

தேசப் பிரிவினையின் போது

பாரத பாகிஸ்தான் பிரிவினை நிச்சயமானது என்று அறிந்த டாக்டர் அம்பேத்கர் இரு தரப்பு மக்களையும் காத்திட ஒரு அருமையான தீர்ப்பை முன்வைத்தார். கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகள் எவ்வாறு கிறிஸ்தவ முஸ்லிம் மக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனரோ அதே போன்று பாரதத்தில் உள்ள முஸ்லிம்களையும், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களையும் பாதுகாப்பாகப் பரிவர்த்தனை செய்து கொண்டால் பேரிழப்பையும், பெரும் கலவரத்தையும் தவிர்க்கலாம் என்று கூறினார்.

அது செவிடன் காதில் ஊதிய சங்கானது. இதன் விளைவு தேசப் பிரிவினையின் போது சுமார் 10 லட்சம் பேர் படுகொலைக்கு ஆளானார்கள். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்திட வேண்டியதாயிற்று. ஈடு செய்ய இயலாத இழப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று.

பாபா சாஹேப் அம்பேத்கரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. அவருக்கு பாரதரத்னா விருது அவர் இறந்த பின் அளிக்கப்பட்டது.

தன்னுடைய வாழ்நாளை தன் மக்களின் நலனுக்காக, தியாகம் செய்தவர். இன்று அவருடைய 123வது பிறந்தநாள். சம நிலை சமுதாயம் அவர் கண்ட கனவாகும்.  அந்த கனவை நனவாக்குவது இந்நாட்டின் இளைஞர்களால் தான் முடியும்.

தபால் தலை

தபால்தலை

அன்புடன்,
சரவணன்

Wednesday, February 19, 2014

சத்ரபதி சிவாஜி

மிக சாதாரண நிலையில் இருந்து தன்னுடைய சொந்த முயற்சியின் மூலம் இந்த உலகை வென்றவர்கள் தான் சரித்திரத்தில் பெயர் பெறுகின்றனர். அப்படிப் பட்ட உன்னத நிலையை எய்தியவர்கள் மிகவும் சிலரே, அந்த சிலரில் குறிப்பிடத் தகுந்தவர் மன்னர் சத்ரபதி சிவாஜி ஆவார்.

சத்ரபதி சிவாஜி மகராஜ்

இரும்பைவிட வலிமையான மன உறுதி, கூர்மையான அறிவுத் திறன், தன்னை போன்றே சிந்திக்கவும், செயலாற்றவும் கூடிய வலிமையான படையை உருவாக்கிய சிந்தனை இவையெல்லாம் தான் சத்ரபதி சிவாஜியை மாபெரும் வெற்றி வீரனாக மாற்றியது.

  1. முதன் முதலில் கெரில்லா போர்முறையை அறிமுகப்படுத்தியவர்.
  2. 16 வது வயதிலேயே தன்னுடைய முதல் கோட்டையைப் பிடித்தவர்.
  3. தான் சந்தித்த எந்த போரிலும் தோற்காதவர்.
  4. அவுரங்கசீப்பினால் கடைசி வரை தோற்கடிக்கப்படாதவர்.
  5. மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை தன்னுடைய மிகச் சிறிய படையை வைத்து சிதறடித்தவர்.
  6. உளவுத் துறையை மிகத் திறமையாகப் பயன்படுத்திவர்.
  7. வலிமையான கப்பல் படையை உருவாக்கக் காரணமாக இருந்தவர்.
  8. ஹிந்து சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர், இருந்தும் அனைத்து மதங்களையும் சரி சமமாக மதித்தவர்.
  9. பெண்களைப் பெரிதும் மதித்தவர்.
  10. வாழ்வில் மிக மோசமானத் தருணங்களிலும் துவண்டு போகாமல் அசாதாரணமான துணிச்சலையும், போராட்ட குணத்தையும் காட்டியவர்.


அமெரிக்க - வியட்னாம் போர் முடிந்த பின்பு பாரதம் வந்த அப்பொதைய வியட்னாம் தலைவர், முதலில் பார்க்க விரும்பியது சத்ரபதி சிவாஜியின் சமாதியை தான். அங்கு வந்த அவர் சிவாஜிக்கு மரியாதை செலுத்தி விட்டு அதற்கான காரணத்தை அவர் சொன்னார்.

வல்லரசான அமெரிக்காவை எதிர்க்கும் துணிச்சலை அவர்கள் (வியட்நாமியர்கள்) பெற்றது சிவாஜியின் மூலம் தான். அவருடைய கெரில்லா போர்முறை, அவர் பயன்படுத்திய சாதுரியமான உத்திகள், சாகசங்கள் அவர்களுக்கு தெம்பும், உற்சாகமும் தந்து அமெரிக்காவை வீழ்த்த பேருதவி செய்தது. அதை நினைவு கூர்ந்தே அவர் பாரதம் வந்ததும் சத்ரபதி சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார்.

இன்று சத்ரபதி சிவாஜியின் 387வது பிறந்த நாள்.

Thursday, February 13, 2014

கொய்யா மரம்

அப்போது ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன் என்று ஞாபகம். பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் புதிதாக குடி வந்தார்கள். அந்த வீட்டுத் தாத்தா மரம் வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் வீடு கட்டி குடி வந்த போது அந்த வீட்டு வாசலில் ஒரு கொய்யா மரம் இருந்தது. ஆனால் அது எப்போதும் வாடியே தான் இருக்கும். அந்நியன் படத்தில் கலாபவன் மணி வாடகைக் கேட்டு கொடுமைப்படுத்தும் ஒல்லிக் குச்சி மாமி போல இருக்கும்.

ஆனால் அவர் வந்ததும் அந்த இடத்தை அப்படியே மாற்றிவிட்டார். சீக்கு வந்த மரம் படு ஷொக்காக மாறியது. நல்ல இயற்கை உரமிட்டு அதை தெம்பாக்கி விட்டார். பல பூச்செடிகளை நட்டு வளர்த்தார். கொய்யா பழம் காய்த்த போது அதை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார்.


நான் கொய்யா அடிக்க முயற்சி செய்யும் போதெல்லாம், எங்கிருந்து பார்ப்பார் என்று தெரியாது, "ஆருடா அவன் கொய்யா அடிக்கிறது" நான் தான் என்று நன்றாகவே தெரியும். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் திட்டுவதும் அவருக்குத் தெரியாமல் கொய்யா அடித்துத் திண்பதும் ஒரு ஆனந்தம் தான். ஆனால் அவர் மகனுக்கு மரம் வளர்ப்பதில் பெரிய நாட்டம் ஒன்றும் இல்லை.

மழை பெய்யும் காலத்தில் கொய்யா நன்றாக விளையும், வெயில் காலத்தை விட மழைக் காலங்களில் விளையும் கொய்யா பழம் மிகவும் சுவையாக இருக்கும் என்பது என் அனுபவம்.

என்ன தான் திட்டினாலும் நான் கொய்யா பறித்து தின்பதில் அவருக்கு ஒரு திருப்தி தான். தான் வளர்த்த ஒரு மரத்தின் பயனை இவன் ஒருவனாவது பெறுகிறானே என்ற சந்தோஷம். ஒரு பதிவை எழுதிவிட்டு அதை யாராவது படித்தார்கள் என்பதை பார்க்கும் போது ஒரு திருப்தி வரும் பாருங்கள் அது போன்றது. அவர் அந்த கொய்யா மரத்தை மிகவும் நேசித்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நாள் விடியர்காலை நேரம் பக்கத்து வீட்டு அழுகையும், ஓலமும் எங்களை எழுப்பி, தாத்தா இறந்த செய்தியையும் சொன்னது. அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவரை ஏமாற்றி விட்டு கொய்யா பறிக்கும் ஒரு குறும்பும், பெரிதாக ஏதோ சாதித்து விட்ட மகிழ்ச்சியும் என்னிடம் இருக்கும்.

ஆனால் அவர் இறந்து விட்டார் என்று சொன்ன போது கடைசியாக பார்க்கப் போன போது ஒரு சின்னக் குற்ற உணர்ச்சி இருந்தது. அந்த வயதில் அது என்ன விதமான உணர்ச்சி என்றே தெரியவில்லை. அப்பா அழைத்த போது வரமாட்டேன் என்று கூட மறுத்தேன், கட்டாயப் படுத்து அழைத்துப் போனார். அவர் ஆசைப்பட்ட ஏதோவொறு கொய்யாவை நான் திருடி தின்றுவிட்டேனா என்று கூட எண்ணினேன்.

அவர் இறந்த பிறகு அந்த மரம் மிக மிகச் சொற்பமாக விளைய ஆரம்பித்தது. அடுத்த மழைக்காலத்திற்காக காத்திருந்தேன். இந்த முறை குறைவான மழை தான் பொழிந்தது. அவரில்லாமல் கொய்யா அடிக்கும் சுவாரசியமும் குறைந்தது. அவ்வபோது கொய்யா அடித்து சாப்பிட்ட போது சுவை குறைந்தது போன்ற உணர்வு.

சில மாதங்கள் போன பின்பு அந்த கொய்யா மரம் மீண்டும் தன்னுடைய பழைய சீக்கு வந்த நிலையை அடந்தது. தாத்தாவின் மகனும் ஒரு தோட்டக்காரரை வைத்து உரமெல்லாம் போட்டுப் பார்த்தார். ஆனால் அந்த கோய்யா மரம் நல்ல நிலையை அடையவில்லை.

ஒரு நாள் பள்ளியை விட்டு வந்த போது அந்த மரம் இல்லை.

"தேவையில்லாமல்" இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதாக சொல்லி வெட்டி விட்டார்கள் என்று அப்பா மூலம் தெரிந்துக் கொண்டேன்.

மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு என்பதை அனுபவ ரீதியாகத் தெரிந்து கொண்டத் தருணம் அது. 

ஒரு நாள் காலை எழுந்து வந்து தூக்கக் கலக்கத்தில் வெளியே வந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, என் வீட்டிற்கு வெளியே முற்றத்தில் ஒரு சின்ன கொய்யா மரம் துளிர்த்து என்னைப் பார்த்து சிரித்தது.

Monday, February 10, 2014

கூத்து - 10/2/2014

தற்போது நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பல்வேறு விதமான காரணங்களால் முடங்கியிருக்கிறது. சாதாரணமாகவே நமது அரசியல்வாதிகள் அங்கே போய் தூங்குவார்கள் அல்லது போகவே மாட்டார்கள். இப்போது அங்கே விவாதத்துக்கே இடம் இல்லாத படி அமளிகளாலும்,  கூச்சல் குழப்பங்களாலும், ஆளும் கட்சியின் மெத்தன போக்காலும் வீணாகிக் கொண்டிருக்கிறது.

மகளிர் மசோதா, தெலுங்கானா விவகாரம், வகுப்புவாத மற்றும் வன்முறை தடுப்பு மசோதா- போன்ற விவாதத்திற்குரிய மசோதாக்களை இப்போது (மிக குறுகிய காலமேயுள்ள) நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்வதை பார்க்கும் போது அதன் அக்கறை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் உள்ளது என்பது தெளிவு. இது போன்ற மசோதாக்களை நிறைவேற்றி அதன் மூலம் ஒரு சில எம்.பி சீட்டுகளை வெல்லலாம் என்று நினைக்கிறார்கள் போலும்.

நாடாளுமன்றத்தில் விவாதங்கள் மூலம் அந்தந்த மசோதாகள் மீது ஆரோக்கியமான விவாதம் நடைபெற்று அதனுடைய நன்மை- தீமைகள் ஆராயப்பட்டு அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குத் தான் நாம் நம்முடைய வரிப் பணத்தையும், அதிகாரங்களையும் தந்து அனுப்பியிருக்கிறோம். 

அப்படி செய்ய ஆளும் கட்சி அதற்கு தேவையான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். எதிர்கட்சிகளும் அதற்கு துணை புரிய வேண்டும். அது தான் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டு வரும். 

*****************************************************
இந்தியாவில் விற்கும் குறைந்த விலை கார்களின் பாதுகாப்பு தன்மைப் பற்றி ஒரு நிறுவனம் ஆராய்ந்து தன் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதன் அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

எந்தவொரு நிறுவனமும் இந்த சிறிய வகை கார்களில் சரியான பாதுகாப்பு முறைகளை அளிக்கவில்லை. ஒவ்வொரு கார்களிலும் காற்று பை (Air bag) எனப்படும் விபத்து பாதுகாப்புக் கருவி இருக்க வேண்டும். விபத்தின் போது அந்த காற்றுப் பை விரிந்து உயிர் சேதாரத்தை தவிர்க்க உதவும். அந்த பாதுகாப்புக் கருவியை எந்த நிறுவனமும் தருவதில்லை. இதே நிறுவனங்கள் வெளிநாடுகளில் விற்பனை செய்யும் போது இந்த பாதுகாப்புக் கருவி இல்லாமல் விற்பனை செய்வதில்லை.

மேலும் அவற்றின் பாகங்களும், வண்டியின் கட்டுமானத்திற்கு பயன்படும் உலோகம் லேசானதாக இருக்கிறது. இதனால் ஒரு விபத்தின் போது அவை அப்பளமாக நொறுங்கி பயனாளர்களுக்கு அதிகமான சேதாரம் தருகிறது.

இந்தியர்களின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? இதே வெளிநாடுகளில் விற்பனை செய்யும் போது அந்த நாட்டின் விதிகளை கடைப் பிடிக்கும் நிறுவனங்கள் இங்கே அவற்றை வசதியாக மறந்துவிடுகின்றன.

நமது மக்களுக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் தன்மை அதிகம். ஆனால் அது தான் இப்போது உள்ள பல பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது. எந்த ஒரு விதியையும் சரியாக பின்பற்றுவதில்லை. இது போக்குவரத்து சிக்னலில் இருந்து நாடாளுமன்ற விவகாரம் வரை பொருந்தும்.

இந்த "Careless" தன்மை நமது சாபக்கேடு. ஒருவர் அரசு அதிகாரிக்கு லஞ்சம் தறுவதை "பாவம் அவர் நமக்கு தானே உதவி பன்றார் அதுக்கு நாம நன்றி செலுத்துறோம்" என்று நியாயப் படுத்துகின்றார். அதிகாரியோ அவருடைய "நன்றி"யை அனைவரிடமும் எதிர்ப்பார்க்கின்றார். இதுவே மிகப்பெரிய ஊழலுக்கு ஆரம்பப்புள்ளியாக இருக்கிறது.

இதையெல்லாம் சாதகமாக வைத்துத் தான் எல்லா அரசியல்வாதிகளும், பணக்காரர்களும், சந்தர்ப்பவாதிகளும் பிழைக்கின்றனர். விதிகளை பின்பற்றுவதை மிகத் தீவிரமாக நாம் செய்ய வேண்டும் அப்படி இல்லையென்றால் அது நமக்கு தான் நஷ்டம். 

*****************************************************
ஜி.யு போப் என்பவர் இங்கிலாந்தில் இருந்து பாரத நாட்டிற்கு வந்து மதப் பிரச்சாரம் செய்ய வந்திருந்தார். இங்கே வந்த அவர் தமிழைப் பற்றி தெரிந்துக் கொண்டு அதன் மீது பற்று கொண்டு தமிழ் படித்தார், தமிழறிஞரானார்,

திருவாசத்திற்கு உருகாதார், ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற சொல்லுக்கு ஏற்ப திருவாசகம் படித்து அதன் சிறப்பை உணர்ந்து அதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இதைக் கண்டு சிலர், வந்த வேலையை விட்டுவிட்டு மாற்று  மத நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்றும் அதனை விசாரிக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.யு போப் மொழிபெயர்த்த நூலை படித்தால் தான் இந்த வழக்கில் சரியான தீர்ப்பு வழங்க முடியும் என்று அவரிடம் அந்த நூலை வாங்கிப் படித்தார்.

வழக்கு மறுபடியும் நீதிமன்றத்தில் வந்தது. அந்த நீதிபதி சொன்னாராம். "நான் இந்த புத்தகத்தை படித்து முடித்துவிட்டேன். படித்தப் பின்பு தான் நான் உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன்" என்றார். ஜி.யு போப் அதிர்ச்சி அடைந்தார்.

பின்பு நீதிபது தொடர்ந்தார்- "இந்த புத்தகத்தை படித்து முடித்த பின்னும் நீ அந்த மதத்திற்கு மாறாமல் உன் மதத்தைப் பிரசாரம் செய்துக் கொண்டிருக்கிறாயே? அது தவறு தான்" என்றாராம் அவர்.

- மெகா டி.வியில் தெளிதமிழர் பேரவை சார்பில் நடந்த பட்டிமன்றத்தில் கேட்டது.

*****************************************************

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று ரிசர் வங்கி அறிவித்துள்ளது.


2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின் பக்கத்தில், அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்படவில்லை என்றும், எனவே இந்த ரூபாய் நோட்டுக்களை வருகிற மார்ச் மாதத்திற்கு பின்னர் பொது பரிவர்த்தனைக்கு, அதாவது கடைகள் மற்றும் இதர பயன்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது என்றும், ஆனால் வங்கிகள் இந்த ரூபாய் நோட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை

இந்த அறிவிப்பினால் 2005 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வைத்துள்ள பொதுமக்கள், அது குறித்து அச்சப்பட தேவையில்லை என்றும், அந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுமாறும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது.

2005 ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் நடவடிக்கை, வருகின்ற மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

*****************************************************

Wednesday, January 29, 2014

கூத்து - 29/1/2014

இன்றைக்கு தமிழக மக்களின் வாய்க்கு அவலாகக் கிடைத்தவர் மு.க.அழகிரி. அவர் தி.மு.க (திராவிடர் முன்னேற்ற கழகமா அல்லது திரு மு. கருணாநிதி குடும்ப சொத்தா?) விலிருந்து நீக்கப்பட்டது முதல் அவரைப் பற்றியும், அவர் "தம்பி" சுடாலின் பற்றியும் கமென்ட்களும், நிலைத்தகவல்களும் (Status) குவிந்துக் கொண்டிருக்கின்றன. 

இவரை தி.மு.க விலிருந்து நீக்கியதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஏதாவது பயன் கிடைக்கும் என்று தலைவர் கணக்குப் போட்டிருப்பார் என்று தோன்றுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் நடைப்பெற்ற ஊழலாலும், மக்கள் விரோத போக்காலும், அமைச்சர்கள் முதல் அடிப்பொடிகள் வரை செய்த அட்டகாசங்களால் இழந்த மதிப்பை மீண்டும் பெறுவதர்குரிய வாய்ப்பாக இது இருக்கும் என்று நினைக்கிறார் போலும்.

மேலும் தன் குடும்பத்துக்காக தமிழ் மக்களை அடமானம் வைத்தவர் என்ற அவப்பெயர் அழகிரியை கட்சியை விட்டு நீக்கியதால் அகலும் என்பது போன்ற மாயையில் இருக்கிறார். இதற்காக அவருடைய "ஒன்றுவிட்ட" தம்பி வீரமணியை விட்டு ஒரு அறிக்கை வேறு. தேர்தல் முடியும் வரை இது போன்ற அரசியல் காமெடிகளும், கோமாளித்தனங்களும் தொடரும் என்று நம்புவோம்.

********************************************************
இந்திய அளவில் தற்போதைய காமெடி பீஸ் திரு.ரா கா, (அ கேவிடமிருந்து தட்டிப் பறித்திரிக்கிறார்) அவரை வைத்து அர்னாப் கோஸ்வாமி செய்த நேர்முக கேள்வி பதில் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி என்று காங்கிரஸார் அலறுகிறார்கள். எல்லா கேள்விகளுக்கும் நேரடியாக அல்லாமல் சுற்றி வளைத்து பதில் சொல்லி சமாளித்ததைப் பார்க்கும் போது, தம்பி தமிழினத் தலைவர் மு.க வுக்கே சவாலாக வரும் போலத் தெரிகிறது. வாழ்க பாரதம்!!!

********************************************************
தனியார் விமான நிறுவனங்கள் எம்.பி க்கள் தங்கள் விமானங்களில் பயனம் செய்யும் போது இலவச தீனிகள், தனியான லௌஞ்சுகள் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

அடப்பாவிகளா!! உங்களுக்கு சம்பளம் தருவதே ஒரு தண்டச் செலவு, இதுல ஓசில விமானப் பயனம் அதுல உங்களுக்கு ஓசில நொறுக்குத் தீனி, 'தண்ணி' எல்லாம் தரனுமா. இது மட்டும் ஒரு ஐ.டி கம்பெனியா இருந்தா cost cuttingனு சொல்லி எல்லா கனெக்ஷனையும் புடுங்கி இருப்பானுக. அடுத்த ஜென்மத்திலாவது எம்பி எம்பி குதித்தாவது எம்.பி. ஆயிடனும்.

********************************************************
"நான் தேடும் செவ்வந்தி பூவிது..." என்று இளையராஜா தன்னுடைய இசை மழையை பொழிந்துக் கொண்டிருந்தார்.

அந்த வெள்ளத்தில் கண்களை மூடி மூழ்கும் தருவாயில், இன்னொரு குரல் இ.ரா வுக்கு கோரஸாக,

 "தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை, அஅஆ.."

என்று இழுத்து என்னை மூழ்க விடாமல் காப்பாற்றியது.

புதிதாக இருந்தார் அந்த கோரஸ் நபர். Cabல் முதல் முறையாகப் பார்த்தேன் அவரை. 

நானும் நம்ம கம்பெனி கல்சுரல்ஸில் பாட்டு பாடப் போகிறேன் என்றார். நானும் சிரித்து, நன்றாக பாட்டு பாடுகிறீர்கள் என்றும் கூறினேன். பாட்டு பாட கற்றுக் கொண்டீற்களா என்று கேட்டேன்.

அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க ஐ ஏம் ஜஸ் பாத்ரூம் சிங்கர் தான் என்றார். பின்னர் சிறிது நேரம் தன்னுடைய சாகித்யத்தை காட்ட மீண்டும் ஒரு பல்லவியை இ.ரா வுடன் பாடினார். பொறுத்துக்கொண்டேன்!!

நீங்களும் வந்து பாட்டு கேளுங்களேன் என்றார், உடனே நான் "எங்க? பாத்ரூமுக்கா!!" என்றேன். கோரஸ் நபர் சிரித்துக் கொண்டே திரும்பிக் கொண்டார். அப்புறம் என்ன இ.ரா மட்டும் பாடிக் கொண்டிருந்தார்.
********************************************************

Sunday, January 26, 2014

சில திரை விமர்சனங்கள்

தூம் 3:
சமீபத்தில் பார்த்த படம். மூன்றே நாட்களில் 100 கோடி வசூல், அமீர் கான் வில்லத் தனமாக நடித்தது, அதிகமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது, தொழில்நுட்ப ரீதியில் உயர்ந்த தரம் போன்ற பல காரணங்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட படம். எதிர் பார்த்த படி நல்ல வசூலையும் தந்திருக்கிறது இந்த படம்.
தூம்3
தூம்3
ஆனால் படத்தில் பாதி நேரம் பைக் ஓட்டியே சாகடிக்கிறார்கள். பைக் சேசிங்குக்குத் தந்த முக்கியத்துவத்தை கொஞ்சம் அமீர்கான் எப்படி திட்டமிட்டு கொள்ளையடிக்கிறார் என்பதையும் காண்பித்திருக்கலாம். அந்த வங்கியில் செக்யூரிட்டி குறைவா, அல்லது இயக்குனரிடம் சரக்கு இல்லையோ?
அமிதாப் பச்சனும், தங்கர் பச்சனும் சொந்தமா? என்று கேட்கும் அளவிற்கு ஹிந்தி திரைப்பிரபலங்களைப் பற்றித் தெரிந்த ஒருவன் இந்த படத்தைப் பார்க்கும் போது ஹிந்தி படங்களில் வரும் எல்லா நடிகர்களும் ஒரு வீலில் பைக் ஓட்டுவார்களோ என்ற எண்ணம் மேலோங்கும்.
அபிஷேக் பச்சனுடன் வரும் அல்லக்கை காமெடி செய்கிறேன் பேர்வழி என்று கொஞ்சம் மொக்கை மற்றும் பரவாயில்லை ரகம். கத்ரீனா கைஃப் வருகிறார், போகிறார் மற்றும் பாடல்களில் கொஞ்சூண்டு ஆடை கட்டி ஆடுகிறார் தமிழ் படங்களில் கூட இன்னும் கொஞ்சம் நடிக்க விடுவார்கள் போல!!
நோலனின் Prestige படத்தின் கருவை உருவி கொஞ்சமே பயன்படுத்தியிருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் இருந்து உருவியதைப் பற்றி தோலுரித்து தொங்கவிட வேறு பதிவர்கள் இருக்கின்றனர். நமக்கு தெரிந்த அளவில் இது மட்டும் கண்ணில் பட்டது.
சில ட்விஸ்டுகள் மற்றும் இறுதிக் காட்சியில் அமீர்கான்களின் முடிவு "நன்று". சராசரி ரசிகனுக்கு சூப்பர், மற்றபடி சாதாரண ஒரு மசாலாத் திரைப்படம்.
ஜில்லா மற்றும் வீரம் :
ஜில்லா மற்றும் வீரம் படங்கள் பொங்கலுக்கு வந்து தமிழ் ரசிகர்களின் ரசிகத் 'திறனுக்கு' விருந்து படைத்து வசூல் சாதனை படைத்து வருகின்றன. இரண்டும் குடும்பப் பிண்ணனியில் அமைந்த வெட்டுக் குத்துத் திரைப்படங்கள். ஒருவர் தன்னை எடுத்து வளர்த்த தந்தையை காப்பாற்றி திருத்துகிறார், மற்றவர் தன்னுடைய காதலியின் குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.
ஜில்லா- வீரம்
ஜில்லா- வீரம்
என்னை பொறுத்தவரையில் இரண்டு படங்களிலும் வன்முறைக் காட்சிகள் அதிகம். ஒப்பீட்டளவில் வீரம் பரவாயில்லை என்றேத் தோன்றுகிறது. ஓரே ஒரு வசனம் மனதில் நிற்கும்படி இருந்தது வீரத்தில்.
"நம்மள சுத்தி இருக்குறவங்கள நாம பார்த்துகிட்டா, மேல இருக்கிறவன் நம்மள நல்லா பார்த்துப்பான்!!"
மத்தபடி இரண்டும் கதாநாயகர்கள் தொட்டா தொட்டபெட்டா உடையும், சிரிச்சா எரிமலை வெடிக்கும் என்பன போன்ற  காதில் பூ வைக்கும் ஆஆஆக்- ஷன் காட்சிகளை வைத்து "மிரட்டியிருக்கிறார்கள்". வேறு நல்லத் திரைப்படங்கள் இல்லாததாலும், இரண்டும் பரவாயில்லை ரகம் என்பதாலும் ஜில்லா கல்லா கட்டுது - வீரம் சோரம் போகாது.
நம்முடைய பெரிய ஹீரோக்கள் எப்போதுதான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கப் போகிறார்களோ.
- சரவணன்

Wednesday, January 22, 2014

நேதாஜி – மறக்கடிக்கப்பட்ட சுதந்திர வீரர்

நேதாஜி:

 நேதாஜி இந்த வார்த்தைக்கு அர்த்தம்தலைவர்என்பது ஆகும். சிலருக்கு மட்டுமே அவர்களுக்கு தரும் பட்டப்பெயர் பொருந்தும். (நம் ஊரிலும் சிலர் இருக்கிறார்கள் எளைய தளபதி, சுமால் தளபதி, பிர்ச்சி தளபதி என்று அவர்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல்). ஆனால் சுபாஷ் சந்திர போஸுக்கு நேதாஜி என்ற பெயரே நிலைத்துவிட்டது. அவர் அதற்கு உதாரணமாகவும் திகழ்ந்தார்.

கொல்கத்தாவின் வீதிகளில் ஒரு சுதந்திரத் தலைவர் உரையாற்றிக் கொண்டிருந்தார். அவர் கூறிய சில வாசகங்கள் அங்கே இருந்த ஒரு சிறுவனின் மனதில் பதிந்தது. அவன் அதை மனதில் பாடம் செய்து கொண்டே தன்னுடைய நோட்டில் எழுதுவதற்கு அவனுடைய வீட்டிற்குள் ஓடினான்.

வீட்டிற்குள் அமர்ந்திருந்த தன்னுடைய தம்பியைத் தாண்டி ஓடினான். அதை கண்ட அவனுடைய தம்பிக்கு வெகுவாக கோபம் வந்தது. அவனை தாண்டி குதித்து சென்றதால் வந்த கோபம் அதையும் மீறி அப்படி என்ன அவசரமாக செய்யப் போகிறான் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சென்று பார்த்தான்.

ஓடிவந்த அண்ணன் தன்னுடைய நோட்டில் கீழ்கண்ட வாசகங்களை எழுதினான் -

நான் பணக்காரனாவேன், நான் மாமனிதனாவேன், நான் புகழ்பெற்றவனாவேன் எனக்காக அல்ல, என் தாய்நாட்டிற்காக
“I will become rich , I will become great, I will become popular – not for myself,  but for my country.”

இந்த வாசகங்களை எழுதி விட்டு அண்ணன் வெளியே போய்விட்டான், ஆனால் அதைப் படித்த தம்பி தன்னுடைய இதயத்தில் எழுதிக் கொண்டான். அதையே தன்னுடைய வாழ்வின் குறிக்கோளாக எடுத்துக் கொண்டான். அந்த சிறுவன் தான் சுபாஷ் சந்திர போஸ். அந்த சுதந்திரத் தலைவர் யோகி ஸ்ரீ அரவிந்தர் ஆவார்.

1897 ஜனவரி 23 அன்று கட்டாக்கில் ஜானகி நாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அறிவாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். 16 வயதிலேயே துறவற நிலை அடைய வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் சரியான குரு கிடைக்காததால் இரண்டு மாதங்கள் கழித்து வீடு திரும்பினார். தன்னுடைய குருவாக சுவாமி விவேகானந்தரை இவர் ஏற்றார்.

தன்னுடைய தந்தையின் வேண்டுகோளின் பேரில் கொல்கத்தா பிரஸிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். அங்கே அவருடைய சுதந்திர போராட்ட உணர்ச்சிக்கு தூண்டுதலாக இருந்த அந்த சம்பவம் நடைபெற்றது. அந்த கல்லூரியில் ஓட்டன் என்ற சரித்திரப் பேராசிரியர் இந்தியர்களை தரக்குறைவாக பேசியும், நடத்தியும் வந்தார். இதனால் கோபமுற்ற அவர் தன்னுடைய நண்பர்களை கூட்டிக் கொண்டு அவரை தாக்கினார். இதனால் கல்லூரியிலிருந்து சுபாஷும் அவர் நண்பர்களும் நீக்கப்பட்டார்கள் மேலும் இரண்டு வருடம் எந்தக் கல்லூரியிலும் சேர முடியாமல் படிப்பைத் தொடர முடியாத நிலைக்கு ஆளானார்கள்.

இதனால் தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட சித்தரஞ்சன் தாஸ்மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.

1919
ல் ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்தது. ஜெனரல் டையர் என்ற கொலைகாரன் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொலை செய்தான். இது அவரது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் சுதந்திரப் போரில் கலந்து கொள்ள முக்கியமான ஒரு காரணம் என்றும் கூறலாம்.

நாட்டு சூழ்நிலைப்பற்றி அடிக்கடி விவாதங்களில் ஈடுபட்ட சுபாஷை அவரது தந்தையார் அரசியலில் ஈடுபடுத்த விரும்பாமல் (.சி.எஸ்) இந்தியன் சிவில் சர்வீஸ் (இன்றைய ..எஸ் (IAS)க்கு ஈடானது) எழுத லண்டனுக்கு அனுப்பிவைத்தார். அதில் இந்தியாவிலேயே நான்காவதாக தேறினார் சுபாஷ், ஆனால் பாரதத்தை அடிமையாக்கி வைத்திருந்த ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது என்ற முடிவினால் அந்த பட்டத்தை அங்கேயே தூக்கி எறிந்து விட்டு வந்தார்.

இதை பாராட்டிய சித்தரஞ்சன் தாஸ் அவரை சுதந்திர போரில் பங்கு பெற அழைத்தார். இதே சமயத்தில் தான் காந்தியும் பாரத அரசியலில் ஈடுபட்டார். தாஸ் தான் நிறுவியதேசியக் கல்லூரியில்” 25தே வயதான போஸை தலைவராக நியமித்தார், அவர் மாணவர்களுக்கு ஆங்கிலேய அரசின் சூழ்ச்சிகளை விளக்கியும் சுதந்திர உணர்வு ததும்பவும் சொற்பொழிவாற்றியதுடன், பாடமும் நடத்தினார்.

1924 கொல்கத்தா மாகாணத் தேர்தலில் வெற்றிப் பெற்று சுபாஷ் கொல்கத்தாவில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் அவரைக் கைது செய்து அவரை சிறையில் அடைத்தது. அங்கு அவருக்கு காசநோய் தாக்கியது, இருப்பினும் அவரை சிகிச்சைக்காகக் கூட வெளியே அனுப்ப மறுத்தது ஆங்கிலேய அரசு. பல்வேறு போராட்டங்கள், மக்க்ளிடம் ஏற்ப்பட்ட கொந்தளிப்பு ஆகிய காரணங்களாலும், நோய் முற்றி அவர் பிழைப்பதே அரிது என்று நம்பியதாலும் ஆங்கிலேய அரசு அவரை நிபந்தையின்றி விடுதலை செய்தது.1930ல் ஐரோப்பிய சுற்று பயணம் மேற்கொண்டார். பல தலைவர்களை சந்தித்தார்.
நேதாஜியும் ஹிட்லரும்

யாசகம் வேண்டிப் பெறுவது அல்ல, போராடிப் பெறுவதே சுதந்திரம் என்ற எண்ணம் கொண்டவர் சுபாஷ். உங்கள் ரத்ததை தாருங்கள் உங்களுக்கு விடுதலையை பெற்றுத் தருகிறேன்என்று அறைகூவல் விடுத்தவர். இதனால் ஆரம்பத்திலேயே காந்திக்கும் போஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. பல இடங்களில் காந்தி எடுத்த தவறான முடிவுகளை சுபாஷ் எதிர்த்தார். சுயாட்சிக்கு காந்தி எதிர்ப்பு தெரிவித்த போது பலரும் அதை எதிர்த்து பேச தயங்கிய போது போஸ் எழுந்து அதை தவறு என்று சுட்டினார். ஜெனரல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம் சிங்கை பாராட்டி கடிதம் எழுதினார் போஸ், உத்தமின் அந்த வழி தவறு என்று எதிர்த்தார் காந்தி. இதனால் போஸ் திட்டமிட்ட ரீதியில் காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார். 

நேதாஜி - ஜின்னாவுடன்
1939ல் மீண்டும் போஸ் காங்கிரஸ் தலைவராக தேர்தலில் போட்டியிட்டார், அவரை எதிர்த்து ராஜேந்திர பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடக் கோரினார் காந்தி. அவர்கள் மறுத்துவிட பட்டாபி சீதாராமையாவை நிறுத்தினார். அதில் 1580 வாக்குகள் வித்தியாசத்தில் போஸ் வெற்றிப் பெற்றார். அதை எதிர்த்து உண்ணாவிரதம்!! இருந்தார்!! காந்தி. அவரை சமாதானப்படுத்த தானே பதவி விலகினார் போஸ்.

ஃபார்வர்டு ப்ளாக் என்ற கட்சியைத் தொடங்கினார் சுபாஷ். அதன் அகில இந்திய தலைவராக அவரும், தமிழகத் தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

1940 சமயத்தில் சுதந்திரப் போர் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. பாரத நாட்டு மக்களிடம் சுதந்திரத் தாகம் வீறு கொண்டெழுந்திருந்தது. அதே சமயம் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்திருந்தது. அப்போது ஆங்கிலேய அரசாங்கம் பாரத மக்களின் ஆதரவை வேண்டியது. ஆனால் போஸ் போரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டினார். அதனால் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது. அங்கிருந்து தப்பி சென்ற அவர் இத்தாலி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஹிட்லரின் அழைப்பின் பேரில் ஜெர்மனி சென்றார், அங்கே அவருக்கு சிறப்பான வரவேற்புத் தரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக ஹிட்லர் உறுதியளித்தார்

பின்னர் பெர்லினில் ஆசாத் ஹிந்த் என்ற பெயரில் வானொலி ஒலிபரப்புத் துவங்கியது. 3000 வீரர்கள் அடங்கிய போர்ப்படை தயாரானது ஜெர்மனியில். ஆனால் 1942ல் ஜெர்மனி படைகள் ரஷ்யாவில் புகுந்தவுடன் வரலாறு மாறியது. ஜெர்மானிய படைகள் தோல்வி கண்டு பின்வாங்கின, அதைப் பார்த்த போஸ் பாரத விடுதலைக்கு அங்கே எந்த உதவியும் கிடைக்காது என்று அங்கிருந்து ஜப்பான் வந்தார்.

ராஷ் பிஹாரி போஸால் தொடங்கப்பட்டு செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி மீட்டு அதன் தலைவரானார். பர்மாவில் இருந்து இதனை இயக்கினார், நேதாஜி. ஆனால் ஆங்கிலேய படைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடியது நமது ராணுவம். இருப்பினும் மனம் தளராமல் பாரத எல்லை வரை முன்னேறியது. விதி வசமாக ஜப்பான் சரணடைந்ததால் இப்படை தோல்வியைத் தழுவியது. அப்போது காந்தி .என். விற்கு ஆதரவு தந்திருந்தால் மிகச் சுலபமாக விடுதலை அடைந்திருக்கலாம்.
இந்திய தேசிய ராணுவம்

அவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று ஜப்பானில் இருந்து தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததாகவும். அவர் சென்ற விமானம் விபத்து ஏற்ப்பட்டு அவர் இறந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் அந்த நாளில் அப்படி ஒரு விபத்து பதிவு செய்ய படவில்லை என்று சமீபத்திய ஆய்வு தெரியப் படுத்துகிறது. இதனை இன்றைய பாரத அரசாங்கம் ஏற்கவில்லை. மேலும் அவர் உயிருடன் இருந்தார் என்று பலரும் நம்புகின்றனர். அவரைப் பற்றிய 33 கோப்புகள் அரசாங்க ரகசியமாக பிரதமர் அலுவலகத்தில் 75 ஆண்டுகளாக உள்ளது சந்தேகத்தை கூட்டுவதாக இருக்கிறது.

அவர் இறந்தாரா இல்லையா, அப்படி இறக்கவில்லை என்றால் எங்கிருந்தார்? இந்த கேள்விகளுக்கு சரியான பதில்கள் கிடைக்கவில்லை. அவருடைய மரணம் ஒரு மர்மமாகவே இருக்கிறது. அவர் இறந்தாரா என்பதை உறுதி செய்யாமல் அவர் இறந்து விட்டார் என்ற செய்தியை அப்படியே ஏற்றுக்கொண்டதும், அவரை காந்தி விரும்பாததும், காந்தியை தேச விடுதலை நாயகனாக ஆங்கிலேய அரசாங்கம் உருவகப்படுத்தியதையும் உற்று நோக்கும் போது இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பது கண்கூடு.

பாரத விடுதலைக்குப் பின் பிரிட்டன் பிரதமர் கிளமென்ட் அட்லீ கொல்கத்தாவிற்கு வருகைத் தந்திருந்த போது அவரிடம் அப்போதைய கொல்கத்தா நகர தற்காலிக ஆளுநராக இருந்த தலைமை நீதிபதி திரு. சக்ரபோர்த்தி கேட்ட கேள்வியும் அவருடைய பதிலையும் மொழிபெயர்க்காமல் அப்படியே பதிவு செய்கிறேன்.

When B.P. Chakraborti was acting as Governor of West Bengal, Lord Attlee visited India and stayed as his guest at the Raj Bhavan for three days. Chakraborti asked Attlee about the real grounds for granting independence to India. Specifically, his question was, when the Quit India movement lay in shambles years before 1947, where was the need for the British to leave in such a hurry. Attlee’s response is most illuminating and important for history. Here is Governor Chakraborti’s account of what Attlee told him:
“In reply Attlee cited several reasons, the most important were the activities of Netaji Subhas Chandra Bose which weakened the very foundation of the attachment of the Indian land and naval forces to the British Government. Towards the end, I asked Lord Attlee about the extent to which the British decision to quit India was influenced by Gandhi’s activities. On hearing this question Attlee’s lips widened in a smile of disdain and he uttered, slowly, putting emphasis on each single letter— ‘mi-ni-mal’.”

இன்று சுதந்திர வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 117வது பிறந்த தினம். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.

வந்தே மாதரம்!! 

தபால் தலை


மேலதிக விவரங்களுக்கு:
History of the Freedom Movement in India (Firma KLM, Calcutta) R C Majumdar, Volume III pages 609 -10.