Wednesday, April 16, 2014

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்


இந்த வருடம் "ஜய" வருடம் என்று பெயர் கொண்டுள்ளது. ஜய என்ற சொல்லுக்கு வெற்றி என்பது அர்த்தம் ஆகும். இந்த ஆண்டு அனைவருக்கும் வெற்றியைத் தர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

புத்தாண்டு பற்றி முன்பே வெளியிட்ட வலைப்பதிவை இங்கே பதிகிறேன்.

அன்புடன்,
சரவணன்

Monday, April 14, 2014

பாபா சாஹேப்

பாபா சாஹேப்


இன்றைய தினம் நம் நாட்டின் மாமேதை ஒருவரின் பிறந்தநாளும் கூட. அவர் பாரதரத்னா டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். ஒடுக்கப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்து அத்தனை தடைகளையும் முட்டி மோதி வெற்றிப் பெற்றவர்.

பீம்ராவ் 1891 ஏப்ரல் 14 மத்திய பிரதேசத்தில் மஹோவ் என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் ராம்ஜி மலோஜி சல்பால், தாயார் பெயர் ரமாபாய். இவர் பிறந்த போது ராம்ஜி மலோஜி சக்பால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் மஹோவ் கண்டோன்பெண்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி தாலுகா அம்பவடே நகரம் இவரது குடும்பத்தினரின் பூர்வீகம். மகர் சமுதாயத்தை சார்ந்தவர். தீண்டாமை கொடுமைக்கு ஆளாகிய சமுதாயம் அது.

பீம்ராவ் மேல் மிகுந்த அன்பும், பரிவும் கொண்ட மகாதேவ் அம்பேத்கர் என்ற பிராமண சமுதாய ஆசிரியர் பள்ளி ஆவணத்தில் பீம்ராவ் அம்பவடேகர் எனும் பெயருக்கு பதிலாக தனது குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இணைத்து பீம்ராவ் அம்பேத்கர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த பெயரே இறுதிவரை நிலைத்துவிட்டது.

டாக்டர் அம்பேத்கர் வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளார். பல நேரத்தில் காந்திஜி போன்ற முக்கிய தலைவர்களின் கருத்துகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்துள்ளது இவரது சிந்தனை. இருந்த போதிலும் இவர் ஒரு தலைசிறந்த தேசபக்தர். தேசத்திற்கு விரோதமாக எந்த செயலையும் அவர் மேற்கொண்டதில்லை. தொலைநோக்குப் பார்வையுடன் நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வாக தெளிவான கருத்துகளையே எப்போதும் கூறி வந்துள்ளார். அதில் ஒரு சிலவற்றை பார்ப்போம்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சலுகையும் அம்பேத்கரும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் எதுவும் தரக்கூடாது என்று அரசியல் சாசன சபையில் எதிர்ப்புத் தெரிவித்தார் மேலும் அம்மாதிரியான சட்டப்பிரிவை தன்னால் எழுதிட இயலாது என்று சொல்லிவிட்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகள் தருவதற்கு முயற்சிகள் மேற்கொண்ட நேரு இது விஷயமாக டாக்டர் அம்பேத்கரை நேரில் சந்திக்க தைரியமின்றி ஷேக் அப்துல்லாவை அனுப்பி வைக்கிறார்.

அம்பேத்கர் அவர்களை நேரில் பார்த்து பேசிட வருகை தந்த ஷேக் அப்துல்லாவிடம், "எல்லைகளைக் காத்திர இந்திய ராணுவம் வேண்டும், நல்ல சாலைகளை பாரதம் அமைத்துத் தர வேண்டும், தேவையான உணவு பொருட்களை பாரதம் அமைத்துத் தர வேண்டும், பாரதத்திற்கு நிகரான சம அந்தஸ்து காஷ்மீருக்கு தரப்பட வேண்டும்" என்றெல்லாம் எதிர்பார்க்கும் நீங்கள், காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசின் வசம் குறைந்த அதிகாரமே இருக்க வேண்டும், இந்தியர்கள் எவருக்கும் காஷ்மீரில் எந்த உரிமையும் கூடாது என்று சொல்கிறீர்கள். இம்மாதிரியான ஒரு சட்டத்திற்கு நான் ஒப்புதல் அளித்தால் அது பாரதத்தின் நலனிற்கு எதிரானது மட்டுமல்ல, மிகப்பெரிய துரோகமாகும். பாரதத்தின் சட்ட அமைச்சரான என்னால் இச்செயலை செய்ய இயலாதென ஷேக் அப்துல்லாவிடம் தெளிவாக கூறி அனுப்பிவிட்டார்.

எனினும் நேருவின் பலமான ஆதரவால் அம்பேத்கரின் ஒத்துழைப்பு இல்லாமலே அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த சட்டம் 10 ஆண்டுகள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்றார் பிரதமர் நேரு, பின்னர் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி தண்ணீரில் எழுதப்பட்ட எழுத்தானது.

தேசப் பிரிவினையின் போது

பாரத பாகிஸ்தான் பிரிவினை நிச்சயமானது என்று அறிந்த டாக்டர் அம்பேத்கர் இரு தரப்பு மக்களையும் காத்திட ஒரு அருமையான தீர்ப்பை முன்வைத்தார். கிரீஸ் மற்றும் துருக்கி நாடுகள் எவ்வாறு கிறிஸ்தவ முஸ்லிம் மக்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனரோ அதே போன்று பாரதத்தில் உள்ள முஸ்லிம்களையும், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களையும் பாதுகாப்பாகப் பரிவர்த்தனை செய்து கொண்டால் பேரிழப்பையும், பெரும் கலவரத்தையும் தவிர்க்கலாம் என்று கூறினார்.

அது செவிடன் காதில் ஊதிய சங்கானது. இதன் விளைவு தேசப் பிரிவினையின் போது சுமார் 10 லட்சம் பேர் படுகொலைக்கு ஆளானார்கள். சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்திட வேண்டியதாயிற்று. ஈடு செய்ய இயலாத இழப்புகளை சந்திக்க வேண்டியதாயிற்று.

பாபா சாஹேப் அம்பேத்கரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இன்னும் இருக்கின்றன. அவருக்கு பாரதரத்னா விருது அவர் இறந்த பின் அளிக்கப்பட்டது.

தன்னுடைய வாழ்நாளை தன் மக்களின் நலனுக்காக, தியாகம் செய்தவர். இன்று அவருடைய 123வது பிறந்தநாள். சம நிலை சமுதாயம் அவர் கண்ட கனவாகும்.  அந்த கனவை நனவாக்குவது இந்நாட்டின் இளைஞர்களால் தான் முடியும்.

தபால் தலை

தபால்தலை

அன்புடன்,
சரவணன்